இல்லம் சங்கீதம் 17: உறவுக்கு உயிரூட்டும் பேச்சு // Ezhilarasan health tips family life ILLAM SANGEETHAM
இல்லம் சங்கீதம் 17: உறவுக்கு உயிரூட்டும் பேச்சு
ஏதாவது பேசு.
துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம், சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதிய முகம்
எதிர்பாராத சம்பவம்
வாகன நகர்தலில் வடிவழகு கெடாத கோலம்
வந்து போன வியாபாரத் தந்திரம்
பூக்காத செடியின் யோசனை
புதிரான புத்தக வாசனை
என்று சொல்லேன் எதையாவது
-உமா மகேஸ்வரி
சட்டென மின்சாரம் தடைபட்டு இருள் சூழ்ந்ததில் சுந்தரிக்கு எரிச்சல் மண்டியது. தொடர்ந்து நெற்றிப் பொட்டில் வலி தொடங்கியது. இதே இருட்டால் வீட்டின் இன்னொரு மூலையில் ராகவன் தடுமாறுவதும் அவன் இடறியதால் எதுவோ விழுந்து உருளும் சத்தமும் கேட்டது. வழக்கமான மைக்ரேன் தலைவலி சுந்தரிக்கு அதிகரித்தது.
தேங்கிப்போன தாம்பத்தியம்
அபார்ட்மெண்ட் விரிவாக்கப் பணிகள் நடப்பதால் இரண்டொரு நாள் அடிக்கடி மின்தடை ஏற்படும், ஜெனரேட்டர் வசதியும் தடைபடும் என்று முன்பே அறிவித்திருந்தார்கள். வேலை மும்முரத்தில் அதை மறந்து முன்னேற்பாடுகள் செய்யாததால் இப்போது ஏக சங்கடம். சுந்தரியும் ராகவனும் செல்போன் வெளிச்சத்தில் ஹாலில் சேர்ந்தனர். மின்சாரம் எப்போது வரும் என்பது தெரியாததால் செல்போன் பயன்பாட்டை மிச்சமாக்கி இருவரும் சற்று நேரம் இருட்டில் வெறுமனே அமர்ந்திருந்தனர். இருட்டும் இருவரின் நீடித்த மவுனமும் சுந்தரிக்குத் தலைவலியை மேலும் அதிகப்படுத்த, ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள். மார்கழியின் சில்லென்ற குளிர்க்காற்று சுந்தரியைப் பாய்ந்து தழுவியது. வாசனை மெழுகுவத்தியைப் பற்றவைத்ததில் வாசத்துடன் படர்ந்த வெளிச்சமும் ஜன்னல் வழிக் குளிரும் சூழலுக்கு ரம்மியம் சேர்த்தன. இந்த இருட்டில் என்ன சமைப்பது என்று சுந்தரி யோசிக்கும்போதே, ராகவன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு போன் போட்டான்.
பார்சலைப் பிரித்தபோது தனக்குப் பிடித்த பதார்த்தங்களாக ராகவன் ஆர்டர் செய்திருப்பது தெரியவர, சுந்தரி உணவை ருசித்தவாறே கணவனைக் கவனித்தாள். மின்சாரம் தடைபடவில்லை என்றால் இருவரும் ஒரே வீட்டின் வெவ்வேறு மூலைகளில் டிவியிலோ செல்போனிலோ மூழ்கி அந்நியர்களாகப் பொழுதைக் கழித்திருப்பார்கள். பசிக்கும்போது தனித்தனியாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தங்கள் தனி உலகில் தொலைந்திருப்பார்கள். இன்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகச் சாப்பிடுகிறார்கள். சுந்தரியைப் போலவே ராகவனுக்கும் எண்ணவோட்டம் எழ, மனைவியைப் பார்த்தான். ஒற்றை மெழுகுவர்த்தியின் வித்தியாசமான ஒளிவீச்சு சுந்தரியைப் புதிதாகக் காட்டியது.
“தலைக்கு டை அடிக்கிறியா?”என்ற கணவனின் திடீர் கேள்விக்கு சுந்தரி திணறினாள்.
18 ஆண்டு மண வாழ்க்கை அனுபவத்தில் அனைத்தையும் கடந்த ஒரு மாதிரியான அமைதிக்கு அவர்கள் ஆட்பட்டிருந்தனர். அவர்களது ஒரே மகள் பள்ளி முடித்து கல்லூரி செல்லக் காத்திருக்கிறாள். நுழைவுத் தேர்வு தயாரிப்புக்காக வெளியூரிலிருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறாள். இருவருக்கும் இடையே பாலமாக இருக்கும் ஒரே மகளும் திருமணமாகிப் போய்விட்ட பின் ஒட்டுதல் இல்லாத குடும்ப வாழ்க்கை என்ன ஆகும் என நினைத்தால் சுந்தரிக்கு விதிர்க்கும். ராகவனுடன் எதுவும் பெரிதாகப் பிரச்சினையில்லை. அதே வேளை இருவருக்கும் இடையே புதிதாக எதுவுமில்லை என்பதே பிரச்சினையாக இருந்தது. இந்த உறவு இனி அவ்வளவுதான். மேலே வளரவும் வாய்ப்பில்லாது, கீழே இறங்கவும் வழியில்லாது இடையில் அடைத்துக்கொண்டு இம்சிக்கிறது. பேச்சோ பகிர்வோ பொருட்படுத்தும்படியாக எதுவுமின்றி ஒரே வீட்டில் இருவரும் இயந்திரகதியாக உழல்கின்றனர்.
உறவுக்கு உயிரூட்டும் உரையாடல்
இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக, மானசீகக் கோட்டைத் தாண்டி ராகவன் எழுப்பிய கேள்வி, சுந்தரியை ஆச்சரியப்படுத்தியது. கருநாகமெனப் பிணைந்த கூந்தலுக்கு இன்னமும் தலைச்சாய அவசியம் எழாததில், கணவனின் கேள்வி சுந்தரிக்குப் பாராட்டாகவே தெரிந்தது. சுந்தரி போலன்றி ராகவனுக்கு வெள்ளி முடிகள் அதிகரித்திருந்தன. நரையுடனான போராட்டத்தில் கிருதாவைக் குறைத்து மீசையை மழித்து ஆளே மாறியிருந்தான். மனைவி கவனிப்பதை உணர்ந்தவனாக “மறுபடியும் மீசை வைக்கட்டுமா?” என்றான்.
பதிலுக்கு அவள் வெட்கத்துடன் தலையாட்டினாள். உண்மையில் கணவனின் மீசை அவளுக்கு மிகவும் பிடிக்கும். திருமணத்துக்கு முன்பும் திருமணமான புதிதிலும் அவன் மீசை குறித்து அதிகம் சிலாகித்திருக்கிறாள். சாப்பிட்டு முடித்ததும் ஜன்னலோர சோபாவில் நெருங்கி அமர்ந்தபோது கணவனின் மீசையற்ற வழுவழு முகத்தை அரையிருட்டில் வருடினாள். ஏனோ அதுவும் இப்போதைக்குப் பிடித்த மாதிரியிருந்தது.
அப்படித்தான் அன்று வேறுவழியின்றி அந்தத் தம்பதி மீண்டும் உறவுக்கு உயிரூட்டும் உரையாடலில் விழுந்தார்கள். இருளும் குளிரும் அந்தப் பேச்சுக்கு புதிய ஊற்றுக் கண்களைத் திறந்துவிட்டன. பேச்சினூடே கணவனின் மார்பில் சுந்தரி சாய்ந்துகொண்டபோது அதுவரையிலான மைக்ரேன் தலைவலி குறைவதாக உணர்ந்தாள். பேச்சு எங்கெங்கோ சுற்றிச் சுற்றிப் படர்ந்தது. இந்த நாளுக்காகக் காத்திருந்தாற்போல தூக்கம் மறந்து இருவரும் பேசியே மாய்ந்தார்கள். சன்னக் குரல்களில் உறுத்தாது நீண்ட உரையாடலில் இருவருக்கும் பரஸ்பரம் மிச்சமிருந்த காதலும் பிரியமும் பொங்கிப் பிரவகித்தன. காலையில் ‘சுள்’ளென சூரியன் உறைத்தபோது பதறி எழுந்த சுந்தரி, வழக்கமான காலைப் பொழுதுகளை நரகமாக்கும் மைக்ரேன் தலைவலி இல்லாததை உணர்ந்து மகிழ்ந்தாள்.
ஆண் பேச்சும் பெண் பேச்சும்
தாம்பத்திய சாகரத்தில் இருவருக்கும் இடையிலான பேச்சு இன்றியமையாதது. ஆணின் பேச்சு பெரும்பாலும் நேரடியாக இருக்கும். தர்க்கரீதியாகப் பேசி சட்டென முடித்துக்கொள்வான். வார்த்தைகளுக்கு இடையேயும் வரிகளுக்கு இடையேயும் பேச்சின் சாரத்தை ஊகிக்கவும் உணர்த்தவும் பெண்ணால் முடியும். பெண் பேச்சு பெரும்பாலும் உணர்வுபூர்வமானது. பெண்ணுக்கு இயல்பாகப் பேசப் பிடிக்கும். விஷயமே இல்லாதுபோனாலும் பேச்சைத் தொடங்கி வளர்த்துச்செல்லவும் அதன் வழியே உறவுகளை அரவணைத்துச் செல்லவும் அவளால் முடியும்.
தம்பதிக்கு இடையே இணக்கமான பேச்சிருந்தால் குடும்பத்தில் பெரும்பாலான சச்சரவுகள் தொடக்கத்திலேயே நமுத்துவிடும். தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே தம்பதியருக்கு இடையிலான சண்டைகளின் மையச்சரடாக எப்போதும் இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளாமைக்கு ஈரப் பேச்சு வறண்டு போவதுதான் காரணமாக இருக்கும். அதாவது, தம்பதியருக்கு இடையிலான பிரச்சினை எதுவானாலும் சுமுகமான பேச்சின் உதவியால் அவற்றை ஊதித் தள்ளிவிடலாம்.
பேசித் தீர்க்கலாம்
தீராத பிரச்சினைகளை அவற்றின் போக்கில் தீரட்டும் என கணவன் மனைவி இருவரும் அதனை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களைப் பேசிக் கடக்கலாம். ஆனால், வெள்ளைக் கொடியுடன் பேச இறங்கி வருபவரிடம், ‘இருந்தாலும் நீ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது..’ என்று முடிந்துவிட்ட சண்டையை மறுபடியும் புதுப்பிக்கக் கூடாது. குத்திக்காட்டுவது, எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக வெட்டிப் பேசுவது, குதர்க்கமாகப் பேசுவது போன்றவை குடும்ப நலனுக்கு உகந்ததல்ல.
‘பேச்சில் என்ன கிடக்கிறது. நாங்கள் அந்த நிலையை எல்லாம் தாண்டிவிட்ட ஆதர்ச தம்பதிகள்’ என்று பேச்சைப் புறக்கணிக்கும் தம்பதிகள் உண்டு. உறவின் உணர்வுபூர்வமான இணக்கத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட வகையிலும் பேச்சு இறுக்கத்தைத் தவிர்க்கும். மற்றவரின் உள்ளக் கிடக்கையைப் பேச்சின் மூலமே அறிந்துகொள்ள முடியும். பேசுவது எத்தனை முக்கியமோ அதே அளவு அடுத்தவர் பேசும்போது காதுகொடுப்பதும் அவசியம். தன் பேச்சைப் பொறுமையாகச் செவிமெடுக்கிறார் என்ற உணர்வே இணைக்கு ஆறுதல் தரும். இந்த ஆறுதலே பிரச்சினையைத் தீர்வுக்கும் நகர்த்திச் செல்லலாம்.
பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் முயற்சிகளில் குடும்ப நலனுக்காக இருவருமே இறங்கிவரத் தயாராக இருந்தால் இல்லறம் இனிக்கும். படுக்கையறையில் எப்போதும் பிரச்சினைகளை அலசிக் காயப்போடுவதைத் தவிர்க்கலாம். முக்கியமாக உறவுக்கு முன்போ பின்போ பிரச்சினைக்குரியவற்றைப் பேச ஆரம்பிப்பது, உறவைக் கசக்கச்செய்யும். திகட்டிய உறவிலும் புதுச் சுவை கூட்ட பேச்சு உதவும். பேச்சின் வழியாகவும் உறவின் உச்சம் கிட்டும். மணவாழ்வில் ஆண்டுகளைக் கடந்த தம்பதியக்கு, உடல் தேவைக்கு அப்பாலான பேச்சும் அதன் வழியிலான பிரியமும் ஆறுதல் தரும்.
பிரச்சினைகளை ஆராயும் பேச்சுக்களைத் தடாலடியாக ஆரம்பிப்பதைவிடக் காலம், இடம் ஆகியவற்றை முன்பே ஒதுக்கி மனதளவில் இருவரும் தயாரானதும் பேசிக் கலந்தால் தீர்வு திறக்கும். இல்லையென்றால், கூடுதல் பிரச்சினைகள் திருகுவலியாக முளைக்கும். எப்பேர்பட்ட பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதாக இருந்தாலும் பரஸ்பரம் உறவுக்கான மரியாதை, நேசம் ஆகியவை கெடாமலும் பொறுமை விலகாமலும் பார்த்துக்கொள்வது இருவருக்கும் முக்கியம்.
(மெல்லிசை ஒலிக்கும்)
எஸ்.எஸ்.லெனின்
நன்றி :
தி இந்து 07 Jan 2018
Collected by
Ezhilarasan Venkatachalam
Comments
Post a Comment