"கணினி, செல்போன்களை இடைவிடாமல் பார்க்க வேண்டாம்" - 'உலர் கண் நோய்' எச்சரிக்கை
நவீனமயமாகிவிட்ட சூழலில் பெரும் பிரச்னையாக 'உலர் கண் நோய்' உருவெடுத்திருக்கிறது.
இன்றைய தொழில்நுட்பம் வாய்ந்த செல்போன், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை மணி கணக்கில் இடைவிடாமல் பார்க்கிறோம். இதனால் நம் கண்களை நாம் முறையாக சிமிட்டுவது இல்லை. இதன் காரணமாக கண்களில் போதுமான ஈரப்பதம் சுரக்காமல் 'உலர் கண் நோய்' பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கண்களில் நோயால் பாதிக்கப்படும் 100ல் 80 பேருக்கு உலர் கண் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வின்படி 21 வயது முதல் 40 வயதுக்குள் இருப்போர் இந்நோயால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. உலக அளவில் 2030 ஆம் ஆண்டில் 275 மில்லியன் மக்கள் உலர் கண் நோயால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 5 முதல் 15 சதவிகிதத்தினருக்கு இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கணினி, நவீன தொடுத்திரை தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டிகள், அலங்கார வண்ண விளக்குகளை வெகுநேரமாக பார்ப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. முறையாக கண்களை சிமிட்டாததால் ஈரப்பதம் குறைந்து உலர் கண் நோய் ஏற்படுகிறது.
காற்றில் பறக்கும் தூசு, மண் படுவதாலும், நீண்ட நேரம் காண்டாக்ட் லென்சுகளை பயன்படுத்துவதும் இந்நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன.
கண்கள் உறுத்துதல், கண்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது நோய் வருவதற்கான அறிகுறிகளாகும். மேலும் அளவுக்கு அதிகமாக கண்களில் நீர் வடிதல், மங்கலான பார்வை ஏற்படுதல் ஆகியவை ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகுவது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கணினி, மடிக்கணினி, செல்போன்களை தொடர்ந்து பார்க்கக்கூடாது.
இல்லையெனில், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடி ஒய்வு எடுக்க வேண்டும். அடிக்கடி நம் கண்களை மூடி திறக்க வேண்டும்.
அதாவது கண்களை சிமிட்டினாலே இந்நோயில் இருந்து காத்துகொள்ள முடியும். இதேபோல், ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
..
Published : 03,Nov 2019
source :
http://www.puthiyathalaimurai.com/newsview/58213/Dry-eye-syndrome--Causes--symptoms-and-prevention
compiled
by
Ezhilarasan Venkatachalam Salem
Comments
Post a Comment